மதுரையில் 2 மணி நேரமாக பரவலாக மழை: நகரின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு

இன்று பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2021-09-30 17:00 GMT

மதுரையில் 2 மணி நேரமாக பரவலாக மழை: நகரின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு - பொது மக்கள் அவதி

தமிழகத்தின் உள் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்றும், கனமழை பொறுத்தவரையில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதல் பிற்பகல் வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், இரவு 7 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது. மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கே.கே நகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், புதூர், விஸ்வநாதபுரம்,பெரியார் பேருந்து நிலையம், காமராஜர் சாலை, வண்டியூர், அவனியாபுரம், பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது: இந்த மழையினால் மழைநீர் சாலையில் தேங்கியது. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோன்று புறநகர் பகுதிகளான கள்ளந்திரி, அழகர் கோவில்,சத்திரப்பட்டி, ஒத்தக்கடை, மேலூர்,திருவாதவூர், கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர், விமான நிலையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால் பாசனத்துக்கு தேவையான மழை கிடைத்துள்ளதாக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News