அழகர் என்ன பட்டு உடுத்தினால் என்ன விஷேஷம்?
மதுரை சித்திரை திருவிழா என்றவுடன் முதலில் எல்லோரது நினைவிற்கும் வருவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி இந்த ஆண்டு என்ன கலர் புடவை கட்டி ஆற்றில் இறங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
சித்திரை என்றாலே மதுரை மக்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அதிலும் மதுரை சித்திரை திருவிழா என்றவுடன் முதலில் எல்லோரது நினைவிற்கும் வருவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வாகத்தான் இருக்கும். பெருமாள், கள்ளழகர் கோலத்தில் காட்சி தருவதும், பக்தர்களை தேடி கோவிலை விட்டு வெளியே வந்து, பல விதமான உபசாரங்களை ஏற்றுக் கொள்வதும் வேறு எங்குமே காண முடியாத நிகழ்வாகும். இப்படியான நிகழ்வு மதுரையில் மட்டுமே நடப்பதால் தான் இந்த திருவிழா மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தீபாவளி பண்டிகையை போன்று, வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு அழகரை காண வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சித்ரா பௌர்ணமியன்று வானில் முழு நிலவு ஜொலிக்க அழகரை தரிசிக்க மதுரையில் மக்கள் வெள்ளமே கரைபுரண்டு ஓடும். அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை ‘சாமி இன்னிக்கு எங்க இருக்குது?’ என்பதே சித்திரைத் திருவிழாவில் மதுரைக்கு வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும். மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழாவில் பல்லாக்கு குதிரையிலே பாட்டு தான் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும். அதே மாதிரி அழகருக்கு ஆயிரம் பாட்டு இருந்தாலும் வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டு தான் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் அந்த அளவுக்கு இந்த ரெண்டு பாட்டும் மதுரை மக்களிடம் ஜாதி வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாய் உயிரோடு உணர்வாக கலந்திருக்கும்.
மீனாக்ஷி சித்திரை திருவிழா- கள்ளழகர் சித்திரை திருவிழா என்று சைவ–வைணவ பிரிவாக இருந்த சித்திரை திருவிழாவை திருமலை நாயக்கர் தான் ஒன்றாக சேர்த்தார் என்று வரலாறு கூறுகிறது.
அழகரின் ஆடையில் என்ன விசேஷம்:
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
பச்சைப் பட்டு:
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.
வெண்பட்டு:
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு தெரிந்து கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப் பட்டுதான் உடுத்திதான் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.
வந்த ஆண்டும் பச்சை பாட்டுதான் கட்டி வரப்போகிறாரா அல்லது வேறு என்ன கலர் கட்டி வருவார் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் அனைவரது மனதிலும் தொற்றிக்கொண்டுள்ளது.