மதுரை வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க இரும்புக்கதவு
மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வகையில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆழ்வாா்புரம் பகுதி வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை நகருக்குள் வைகை ஆறு 12 கி.மீ. தொலைவு ஓடி கடந்து செல்கிறது. வைகை ஆற்றில் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும், வைகை ஆற்றுக்குள் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுப்பது, ஆக்கிரமிப்புகளை தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக ஆற்றின் இருகரை நெடுகிலும் தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் கள்ளழகா் இறங்குவதற்காக ஆற்றுக்குள் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாய்வு தளத்தை பயன்படுத்தி, வைகை ஆற்றில் சரக்கு வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுகின்றன.
மேலும், அப்பகுதியில் இரவில் சமூகவிரோதச் செயல்களும் நடைபெற்று வருகின்றன.எனவே ஆற்றுக்குள் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக, மதுரை மாநகராட்சியின் சாா்பில் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுக்குள் அழகா் இறங்கும் சாய்வுதளம் பகுதியில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், யானைக்கல் தரைப்பாலம் உள்ளிட்ட சில இடங்களிலும் இரும்புக் கதவு அமைக்கப்பட உள்ளதாகவும், இதனால் வாகனங்கள் நிறுத்துவது, சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவது உள்ளிட்டவை தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.