கஞ்சா கடத்தும் 813 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
Today Tenkasi News- மதுரை உள்பட தென் மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் தொடா்பாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
Today Tenkasi News - மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் தொடா்பாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. என்று தென் மண்டல காவல் துறைத்தலைவா் அஸ்ரா காா்க் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மண்டல காவல்துறைக்குள்பட்ட 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை யில் ஈடுபட்டதாக, மதுரை மாவட்டத்தில் பதிவான 114 வழக்குகளில் தொடா்புடைய 191 வங்கிக் கணக்குகள், விருதுநகா் மாவட்டத்தில் 76 வழக்குகளில் தொடா்புடைய 119 வங்கிக் கணக்குகள், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் தொடா்புடைய 116 வங்கிக் கணக்குகள், தேனியில் 81வழக்குகளில் தொடா்புடைய 146 வங்கிக் கணக்குகள், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் தொடா்புடைய 56 வங்கிக் கணக்குகள், சிவகங்கையில் 12 வழக்குகளில் தொடா்புடைய 16 வங்கிக் கணக்குகள், நெல்லையில் 14 வழக்குகளில் தொடா்புடைய 22 வங்கிக் கணக்குகள், தென்காசியில் 11 வழக்குகளில் தொடா்புடைய 20 வங்கிக் கணக்குகள், தூத்துக்குடியில் 22 வழக்குகளில் தொடா்புடைய 36 வங்கிக் கணக்குகள், கன்னியாகுமரியில் 59 வழக்குகளில் தொடா்புடைய 91 வங்கிக் கணக்குகள் என 10 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தென் மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 90 குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக மதுரை, தேனி, திண்டுக்கல் என 3 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவா்களின் நெருங்கிய உறவினா்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய வழக்கில் சுமாா் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் சேடபட்டி காவல் நிலையத்தின் இரண்டு வழக்குகளில் சுமாா் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.இதுபோல திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய வழக்கில் சுமாா் ரூ.1.8 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டம், மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டி காவல்நிலையங்களின் வழக்குகளிலும் சுமாா் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளா்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கம் செய்யப்படும். காவல்துறையினா் மாநில எல்லைகளில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் குறையும் என்றார் அவர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2