மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்கக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்கக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டித்துள்ளது.குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் திருவிழாக்களுக்கும் மத ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் மதுரை கீரைத்துறை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வாசலில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி இந்து முன்னணி அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர்கள் அரசபாண்டி, செல்வகுமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.