ஆன்லைன் ரம்மியில் தோல்வி - மாணவன் தற்கொலை

Update: 2021-01-11 09:15 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி இவரது மகன் தமிழ்ச்செல்வன்(20). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இன்று வீட்டில் உள்ள கிணற்றில் குதித்தார். இதைக்கண்ட அவரது பாட்டி பச்சையம்மாள் சத்தம் போட்டதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தமிழ்ச்செல்வனை மீட்க முயன்றனர். ஆனால் கிணறு சிறிய அளவில் இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.

இது குறித்து மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தமிழ்ச்செல்வனை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரவாயல் போலீசார் இறந்து போன தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தமிழ்ச்செல்வன் வீட்டிலுள்ள நகையை எடுத்து பெற்றோருக்கு தெரியாமல் அடமானம் வைத்து நண்பர்களுக்கு செலவு செய்து உள்ளார். மேலும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு பரிசு ரூ.2500 வாங்கி வந்தவர் ரூ.500 மட்டும் தனது பெற்றோரிடம் கொடுத்துள்ளார். ரூ.2000 செலவு செய்து விட்டு தொலைந்து விட்டதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனை அவரது தாயிடம் தெரிவிப்பதாக தந்தை கூறியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி பணத்தை அதிகளவில் இழந்ததும் இதனை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: