ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 130 ரன்களும், இஷன் கிஷான் 50 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது. அந்த அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக கையா 6 ரன்னுக்கும், கைதானோ 13 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முனியோங்கா 15 ரன்களுக்கு ஆடமிழந்தார்.
இதனையடுத்து சிக்கந்தர் ராசா களம் புகுந்தார். நிலைத்து நின்று ஆடிய அவர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இவருக்கு பிராட் எவன்ஸ் நன்கு ஒத்துழைப்பு தந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இணை 8-வது விகெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தனர்.
ஆட்டத்தின் 49-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அதில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கந்தர் ராசாவின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 95 பந்துகளில் 115 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய அவேஷ் கான், விக்டரின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.