ஜஸ்ட் மிஸ்ஸு...! 399 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க அணி!
தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்களுக்கு 399 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 399 ரன்கள் விளாசி மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.
உலககோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தனது அசுர வேக பேட்டிங் லைனை வெளிக்காட்டி 399 ரன்களைக் குவித்துள்ளது.
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. தன்னுடைய பலம் பவுலிங் தான் என நம்பிய இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் முதலில் பவுலிங் செய்வதே சிறந்தது என முடிவு செய்தது. இதனால் தென்னாப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்டிரிக்ஸ் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே டிகாக் விக்கெட்டை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்க அணி அடுத்த விக்கெட்டுக்கு ரஸி வாண்டர் டஸனை களமிறக்கியது. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ரஸி 60 ரன்களும், எய்டன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்திருந்தனர். ஹென்ரிச் கிளாஸன் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 4 சிக்ஸர்களுடன் 12 பவுண்டரிகளையும் எடுத்திருந்தார். மார்க்கோ ஜென்சன் 42 பந்துகளில் அதிரடியாக 6 சிக்ஸர்களை விளாசி 75 ரன்களை எடுத்திருந்தார்.
ஆட்ட நேர முடிவில் 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்ரிக்க அணி 399 ரன்களை எடுத்தது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.