உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒலிம்பிக்கை விட கடினமானது: நீரஜ் சோப்ரா

19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி தெரிவித்த நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒலிம்பிக்கை விட கடினமாக இருந்ததாக தெரிவித்தார்;

Update: 2022-07-24 05:43 GMT

World Athletic Championship 2022 டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான 24 வயதான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்திற்காக இந்தியாவின் 19 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். இவர், அமெரிக்காவின் யூஜினில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நீரஜ் சோப்ரா 2003ல் அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2வது இந்திய தடகள வீரர் ஆனார் . 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அஞ்சு வெண்கலம் வென்றார்.

ஓரிகானில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா, குறிப்பாக ஹேவர்ட் ஃபீல்டில் சவாலான சூழ்நிலையில் தனது செயல்திறனில் மகிழ்ச்சி அடைவதாகவும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றது திருப்திகரமான சாதனை என்றும் கூறினார். 


கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் 87.58மீ சிறந்த முயற்சியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

"உலக சாம்பியன்ஷிப்பை வெல்வது ஒரு பெரிய கௌரவம். இது தடகளப் போட்டிகளுக்கான மிகப்பெரிய போட்டி. உலக சாம்பியன்ஷிப், பெரும்பாலான நேரங்களில் கடுமையான போட்டியைக் கொண்டுள்ளது. இந்த போட்டிகள் ஒலிம்பிக்கை விடக் கடுமையானது. உலக சாம்பியன்ஷிப் சாதனை ஒலிம்பிக்கை விட உயர்ந்தது. இந்த வருடம் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நீரஜ் சோப்ரா கூறினார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சக விளையாட்டு வீரர்களை பாராட்டி நீரஜ் கூறுகையில், ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பலர் (6) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர், இது இந்திய தடகளத்திற்கு நல்ல தொடக்கமாக கருதுகிறேன். . வரவிருக்கும் பெரிய போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்

இந்தியாவின் ரோஹித் யாதவ், தனது முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 78.72 மீட்டர் தூரம் எறிந்து 10வது இடத்தைப் பிடித்தார்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 90 மீட்டருக்கு மேல் 3 முறை எறிந்து தங்கப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸை நீரஜ் சோப்ரா பாராட்டினார். பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார், இது அவரது தனிப்பட்ட சிறந்த 93 மீட்டரை விட குறைவாக இருந்தது.

பீட்டர்ஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News