RCB வெல்லும் வரை பள்ளி சேரமாட்டேன்.. சிறுவனின் புகைப்படத்தால் ஒரே கலாய்!

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி அதனைத் துரத்தி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது பெங்களூரு.

Update: 2023-04-27 07:21 GMT

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ அதுபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ஒரு மவுசு இருக்கிறது. அந்த அளவுக்கு பெங்களூரு அணிக்கு ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி அந்த அணி தோற்றாலும் உயிருக்கு உயிராக நேசித்து அந்த அணியை ஆதரித்து ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு பதிலாக பாஃப் டூப்ளஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலி தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேப்டனை மாற்றியும் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மாதிரியான வலிமையான அணியின் துவக்க ஆட்டக்காரராக பாஃப் டூப்ளஸிஸ் சென்றும் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள். இது ஒருமுறை இருமுறையல்ல கடந்த 10 ஆண்டுகளாகவே இதே நம்பிக்கையில் ஒவ்வொரு சீசனையும் கடந்து வரும் அவர்களின் மனம்தான் எத்தனை பக்குவமானது.

இந்நிலையில் அந்த அணிக்கு குட்டி ரசிகர் ஒருவர் கிடைத்திருக்கிறார். குறும்புக்கார ரசிகரான இவர் தனது கையில் ஒரு போர்டை வைத்திருக்கிறார். அநேகமாக இவரது தந்தையோ தாயோதான் இந்த வேலையைப்பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர் தனது கையில் வைத்துள்ள பலகையில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வரை நான் பள்ளியில் சேரமாட்டேன் என்று எழுதியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் இதனை காமெடி ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி அதை வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கலாய்த்து வருகின்றனர்.

15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல முயற்சி செய்து வந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் கப்பு நம்மள்து என்று நம்பிக்கையுடன் குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

நேற்றைய நாள் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டது பெங்களூரு அணி. அந்த ஆட்டத்தின்போதுதான் இந்த சிறுவன் கையில் இருந்த பேனர் வைரலானது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி அதனைத் துரத்தி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது பெங்களூரு. 

Tags:    

Similar News