6 4 6 6 6 6 6 ஏழு பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய ரிங்கு! யாரு சாமி நீ?

இந்த ஆட்டத்தில் 21 பந்துகளைச் சந்தித்த அவர் 48 ரன்களை விளாசினார் ரிங்கு. கடந்த ஆண்டும் இது போல ஒரு இன்னிங்ஸ் ஆடியிருப்பார்.;

Update: 2023-04-10 05:15 GMT

கொல்கத்தா அணி இன்று வெற்றி பெறும் என்று அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவே நம்பியிருக்க மாட்டார். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வெங்கடேஷ் அவுட் ஆன பிறகு கொல்கத்தா தோல்வியை தவிர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது. பந்துகள் கரைந்து கொண்டிருக்க, எடுக்க வேண்டிய ரன்கள் மட்டும் அப்படியே நின்றது. ரஷீத் கான் பந்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை விட்ட கொல்கத்தா கடைசி நேரத்தில் சோக வயலின் வாசித்துக் கொண்டுதான் இருந்தது. அப்போது வரை ரிங்கு சிங்கும் டொக் வைத்துக் கொண்டுதான் இருந்தார். கடைசிக்கு முந்தைய ஓவரில்தான் ருத்ரதாண்டவம் தொடங்கியது. அரங்கமே அதிர அந்த 6 சிக்ஸர்களையும் விளாசினார் ரிங்கு சிங். யார் இந்த ரிங்கு சிங்?

18 வது ஓவர் முடிவடையும் நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற 12 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுக்க வேண்டியது இருந்தது. 19வது ஓவரை ஜோஸ்வா லிட்டில் வீசினார். முதல் இரு பந்துகளையும் வைடாக வீசிய லிட்டில் கொல்கத்தா அணிக்கு 2 ரன்களை தானமாக கொடுத்தார். அடுத்து ஆளுக்கொரு ரன்களை அடித்து ஸ்ட்ரைக் ரொடேட் செய்தனர் பேட்ஸ்மன் இருவரும்.

முதல் சிக்ஸ்

லிட்டில் வீசிய 5வது பந்தை சந்தித்தார் ரிங்கு சிங். அந்த பந்தை அவுட் சைட் ஆஃப் திசையில் வீச, பவுலரின் தலைக்கு மேலேயே அடித்து அமர்க்களப்படுத்தினார் ரிங்கு. இதுபோல நிறைய ரன்கள் தேவை எனும்போது அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

20வது ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் முதல் பந்தை உமேஷ் யாதவ் லாவகமாக தட்டி விட்டு ஒரு ரன் எடுத்தார். ரிங்கு சிங் ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

இரண்டாவது சிக்ஸ்

யாஷ் தயாள் வீசிய 2வது பந்தை எதிர்கொண்டார் ரிங்கு சிங். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட இந்த பந்தை டீப் கவர் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரிங்கு.

மூன்றாவது சிக்ஸ்

அடுத்த பந்தை தயாள் ஃபுல் டாஸாக வீச, அதை லாவகமாக வாங்கி ஸ்கொயர் லெக் திசையில் மீண்டும் சிக்ஸாக்கினார் ரிங்கு. அரங்கமே அதிர அடுத்தடுத்த பந்துகளை சரியாக வீச வேண்டிய அழுத்தம் பவுலருக்கு ஏற்பட்டது.

நான்காவது சிக்ஸ்

மீண்டும் ஃபுல் டாஸாக வீசிய யாஷ் தயாள், இந்த பந்தில் எப்படியும் ரன்களைக் கட்டுப்படுத்துவார் என்று நினைத்தால், அதுதான் நடக்கவில்லை. ரிங்கு சிங் இந்த பந்தை டீப் கவர் பாய்ண்ட் திசைக்கு அனுப்பி வைத்தார். பறந்து சென்று எல்லைக் கோட்டையும் தாண்டி விழுந்தது பந்து.

ஐந்தாவது சிக்ஸ்

யாஷ் தயாள் வீசிய 5வது பந்து ஸ்லோவானது. ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட அந்த பந்தை சரியான அடி கொடுத்து எல்லைக்கோட்டுக்கு அனுப்பி வைத்தார் ரிங்கு சிங்.

ஆறாவது சிக்ஸ்

நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நேரத்தில் இந்த பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு பதைபதைக்கச் செய்தவர், கொல்கத்தாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

20 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடைசி ஓவரில் தகர்த்து வெற்றியை ருசித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதற்கு காரணம் ரிங்கு சிங்.

இந்த ஆட்டத்தில் 21 பந்துகளைச் சந்தித்த அவர் 48 ரன்களை விளாசினார் ரிங்கு. கடந்த ஆண்டும் இது போல ஒரு இன்னிங்ஸ் ஆடியிருப்பார்.

ரிங்கு சிங் IPL 2022

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். IPL 2022 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போராடி வெற்றியை நோக்கி கொல்கத்தா அணியை இழுத்துக் கொண்டு சென்றிருந்தார். ஆனால் கடைசியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியிருந்தது. அப்போதும் ரிங்கு சிங் இணைய உலகத்தால் கொண்டாடப்பட்டார். இப்போது மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார் ரிங்கு சிங். 

யார் இந்த ரிங்கு சிங்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிங்கு சிங். இவரது பெற்றோருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதில் 3 வதாக பிறந்தவர்தான் ரிங்கு. சிறு வயது முதலே கிரிக்கெட் கிரிக்கெட் என சுற்றிய இவரால் குடும்பத்துக்கு என்ன லாபம் என அப்பாவின் வெறுப்பை சம்பாதித்தவர். ஆனாலும் தன் பிள்ளை எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என நினைத்து பல அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். 

சிலிண்டர் பாயின் மகன்

ரிங்கு சிங்கின் தந்தை சிலிண்டர் போடும் நபர். இதனாலேயே குடும்ப கஷ்டத்தைப் போக்க அவ்வப்போது வேலைக்கும் சென்று வந்திருக்கிறார் ரிங்கு. இவருக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்ததும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் பிறகு தனது திறமையை வளர்த்துக்கொண்ட அவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

Tags:    

Similar News