தேசிய தடகளத்தில் தங்கம் - சீர்காழி அரசு கல்லூரி மாணவியருக்கு வரவேற்பு
தேசியளவில் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சீர்காழி அரசு கல்லூரி மாணவிகளுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
தேசிய அளவில் தடகளத்தில் தங்கம் வென்ற, புத்தூர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அனுப்பிரியா, ராஜேஸ்வரி.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரில், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், அண்மையில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றனர். 100 மீட்டர் பிரிவில் அனுப்பிரியா என்ற மாணவியும், 5000 மீட்டர் பிரிவில் ராஜேஸ்வரி என்ற மாணவியும் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டும் விதமாக, புத்தூர் கடைவீதியில் இருந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக, மாணவிகளுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மேளதாளங்களுடன் ஊர்வலமாக கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். கல்லூரி நுழைவு வாயிலில், பேராசிரியர் மற்றும் மாணவ,மாணவிகள் இருபுறமும் வரிசையில் நின்று கைத்தட்டி வாழ்த்தி, தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.