ஐபிஎல் 2022: மும்பைக்காக களமிறங்கும் விராட்கோலி
இன்று நடைபெற உள்ள போட்டியில் மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்க விராட்கோலி வான்கடே மைதானத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அறிமுக அணிகளாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி ஆகியவை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நான்காவது அணியாக உள்ளே செல்ல டெல்லியும், பெங்களூரும் போட்டோ போட்டியில் உள்ளது. பெங்களூர் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத்தை வென்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தினால் மட்டுமே பெங்களூர் அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் டெல்லி, பெங்களூர் அணி சம புள்ளிகள் பெறும். ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதனால், பெங்களூர் ரசிகர்கள் அனைவரும் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மாவிற்கு விராட்கோலி ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெறும் போட்டி ப்ளே ஆப் சுற்றுக்கு போகும் கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கப் போவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியதில்லை. டுப்ளிசிஸ் தலைமையில் களமிறங்கியுள்ள பெங்களூர் அணி இந்த முறையாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றால், இன்று நடக்கும் போட்டியில் டெல்லி கட்டாயம் தோற்றாக வேண்டும் என்று பெங்களூர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.