ரோஹித் - விராட் இணைந்து படைக்கப் போகும் சாதனை!

ரோஹித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலி செய்யப்போகும் அட்டகாசமான சாதனை இதோ..!;

Update: 2023-09-02 04:41 GMT

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று மதியம் எதிர்கொள்ள போகும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரோஹித் சர்மாவும், விராட்கோலியும் தனித்தனியாக பல ஆட்டங்களில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரு ஆட்டத்தில் நிலைத்து நின்றுவிட்டால் போதும் எதிரணி பந்து வீச்சாளர்கள் அவர்களை பிரிக்கவே படாத பாடு படுவார்கள்.

இந்த நிலையில் ரோஹித், கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ஒரு சூப்பரான சாதனையை படைக்க வாய்ப்புகள் பிரகாசமாகியிருக்கிறது. பார்ட்னர்ஷிப் சாதனைகளைப் பொறுத்தவரையில் அந்த இணையில் இருவரும் நல்ல அதிரடியான ஸ்கோர்களை குவித்திருப்பார்கள். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின்- கங்குலி, சச்சின்-சேவாக், ரோகித் -தவான், மேத்யூ ஹைடன்- கில் கிறிஸ்ட், ஜெயவர்த்தனே- சங்ககாரா, தோனி- ரெய்னா போன்ற பல ஜோடிகள் எண்ண முடியா சாதனைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ரோஹித்துடன் விராட் கோலி ஜோடி சேர்ந்து விளையாடினால் இன்னுமொரு சாதனை படைக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இவர்கள் இணைந்தால் நிச்சயம் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்ப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை பெறுவார்கள். இந்த ஜோடி வெறும் இரண்டு ரன்களை சேர்த்தால் ஐந்தாயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெறும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த ஜோடியாக வந்தால் ரோஹித் - விராட் இணை 8 வது இடத்தைப் பிடிக்கும். இதற்கு முன்னதாக 7 ஜோடிகள் இப்படி 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கங்குலி- சச்சின் ஜோடி மற்றும் ரோகித் சர்மா -ஷிகர் தவான் ஜோடி 5 ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறது. தற்போது விராட் கோலி ரோகித் சர்மா ஜோடியும் இந்த மைல்கல்லை தொட வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலுமே கங்குலி டெண்டுல்கர் ஜோடி தான் 176 இன்னிங்ஸில் 8827 ரன்களை சேர்த்து முதலிடத்தை பிடித்திருக்கிறது. சச்சின் - கங்குலி ஜோடி 26 முறை பார்ட்னர்ஷிப்பில் சதமும், 29 முறை அரை சதமும் அடித்திருக்கிறது. அதே நேரம் கோலி, ரோஹித் சர்மா ஜோடியை எடுத்துக் கொண்டால் 18 முறை நூறு ரன்களையும் 15 முறை 50 ரன்களையும் கடந்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News