திருச்சி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் சிலம்பம் அறிமுக விழா

Trichy Khelo India Youth Games Cymbam Introductory Ceremony

Update: 2024-01-24 17:53 GMT

திருச்சியில் நடந்து வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் சிலம்பம் அறிமுக விழா நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கும் விழா மற்றும் பிரம்மாண்ட சிலம்பம் அறிமுக விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்சமயம் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும், கூடைப்பந்து மற்றும் தாங்-டா விளையாட்டுகள் கோயம்புத்தூர் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டுகள் மதுரை மாநகரிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரிலும் நடைபெற்று வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மல்லர்கம்பம் போட்டிகள் 21.01.2024 முதல் 24.01.2024 வரை நடைபெற்றதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (24.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்மற்றும் 25 பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட சிலம்பம் அறிமுக விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

மேலும் களரிபயட்டு போட்டிகள் 27.01.2024 முதல் 29.01.2024 வரை திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கிலுள்ள உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News