திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி மேலாண்மைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 1327 பள்ளிகளில் இக்கூட்டம் நடந்தது. இதில், பெற்றோர் - ஆசிரியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினீத் பஞ்கேற்றார்.
அங்கு நடந்த கூட்டத்தில், கலெக்டர் வினித் பேசுகையில், பள்ளிகளுக்கு குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் அனுப்ப வேண்டும். காலதாமதம், பதற்றமின்றி குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களை என்.சி.சி. - என்.எஸ்.எஸ் விளையாட்டு போட்டி போன்றவற்றில் சேர்த்து விடலாம்.
தற்போது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. எனவே, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் பெருந்தொற்று வழிகாட்டுதல்கள், கல்வித்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.