என்னா அடி... இலங்கையைத் துவைத்து காய போட்ட தென்னாப்ரிக்கா!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை துவம்சம் செய்தது தென்னாப்ரிக்க அணி.;
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணி ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. இலங்கை அணிக்கு இலக்காக 429 ரன்களை நிர்ணயித்துள்ளது.
உலக கோப்பை 2023 தொடரின் 4வது ஆட்டத்தில் இலங்கை அணிக்கும் தென்னாப்ரிக்க அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்று தாங்கள் பலமிக்க அணி என்பதை நிரூபிக்க இலங்கை அணி நினைத்தது. இதனால் தங்களுக்கு பலமான பவுலிங்கால் அட்டாக் செய்யலாம் என திட்டமிட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் தாங்கள் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமாவுடன் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது தென்னாப்ரிக்க அணி. இரண்டு பவுண்டரிகளை அடித்த நிலையில் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார் பவுமா. மறுபுறம் குயின்டன் டிகாக் பவுண்டரிகளை அடித்து குவித்துக் கொண்டிருந்தார்.
பவுமாவுக்கு பிறகு அவரது இடத்தில் களமிறங்கினார் ராஸி வென்டர் டசன். இயல்பிலேயே அதிரடி வீரரான இவர், குயின்டன் டிகாக்குடன் சேர்ந்து இலங்கை பந்து வீச்சை அடித்து நொறுக்கி நய்யப்புடைத்தார்.
ரஜிதா, மதுஷங்கா, பதிரனா என அனைத்து பவுலர்களையும் கதிகலங்கச் செய்தது இந்த இணை. 4 பந்துகளுக்கு 1 பவுண்டரிகள் எப்படியாவது வந்துவிடும்போல ரன்கள் குவிந்துகொண்டிருந்தன. இடையிடையே ஓட்டங்களையும் கைப்பற்றியது இந்த இணை. டி காக், டசன் இருவரும் அதிரடியாக ஆடி 100 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர்.
இவர்களது பார்ட்னர்ஷிப்பை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என போராடியது இலங்கை. இலங்கை பந்துவீச்சாளர்கள் பரிதவிப்பில் மேலும் மேலும் ரன்களை வாரி வழங்கினர். இதனால் 200 ரன்களை எளிதில் தொட்டது அணியின் ஸ்கோர். அடுத்து 31வது ஓவரில்தான் இலங்கை சற்று நிம்மதியடைந்தது.
அந்த ஓவரை பதிரனா வீச, அவர் பந்தில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் குயின்டன் டிகாக். அவர் 84 பந்துகளில் 100 ரன்கள் சரியாக எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் களமிறங்கினார். டி காக்தான் புரட்டி போட்டு அடித்தார் என்றால், இப்போது களமிறங்கிய மார்க்ரம் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து வெளுத்தார். இலங்கை பந்துவீச்சாளர்கள் எத்தனை பேர் வந்தாலும் வாங்க என அடுத்தடுத்து ரன்களை ராக்கெட் வேகத்தில் உயர்த்திக் கொண்டிருந்தனர் இந்த இணை.
38வது ஓவரை துனித் வெல்லலாகே வீச அவருக்கு பலனளிக்கும் வகையில் டசன் விக்கெட்டை இழந்தார். அவரும் தனது பங்குக்கு 108 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தம் 110 பந்துகளைச் சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என விளாசியிருந்தார்.
இதனிடையே ருத்ரதாண்டவம் ஆடி 54 பந்துகளில் 106 ரனகள் எடுத்து இதே ஆட்டத்தில் 3வது நபராக சதமடித்தார் மார்க்ரம்.
அடுத்த கிளாஸன் தன் பங்குக்கு 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என வந்த வேகத்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டேவிட் மில்லரும் 21 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஜேன்சன் 7 பந்துகளில் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஆட்ட நேர முடிவில் தென்னாப்ரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் எடுத்திருந்தது.
429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.