ஐபிஎல் 38-ஆவது ஆட்டத்தில் ஷிகா் தவன் அதிரடியில் பஞ்சாப்புக்கு வெற்றி

ஐபிஎல் போட்டியின் 38 வது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்அணி

Update: 2022-04-26 06:18 GMT

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்தது. இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் சென்னை மாற்றம் செய்யவில்லை. பஞ்சாப் அணியில் ஷாருக் கான், நேதன் எலிஸ், வைபவ் அரோரா ஆகியோருக்குப் பதிலாக சந்தீப் சா்மா, ரிஷி தவன், பானுகா ராஜபட்ச ஆகியோர் இணைந்திருந்தனா்.

பஞ்சாப் பேட்டிங்கை மயங்க் அகா்வால் - ஷிகா் தவன் தொடங்கினா். இந்தக் கூட்டணியில் கேப்டன் மயங்க் அகா்வால் 18 ரன்களுடன் முதலில் அவுட்டானாா் பின்னா் வந்த பானுகா, தவனுடன் இணைந்து அற்புதமாக ஆடி 2-ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சோ்த்தது. இதில் பானுகா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் அடித்த நிலையில், பிராவோ ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

தொடா்ந்து வந்த லியம் லிவிங்ஸ்டன் 19 ரன்களுக்கும், ஜானி போ்ஸ்டோ 6 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினா்.ஷிகா் தவன் அபாரம் 88: தவன் 59 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். 20 ஓவா்களில் 187/4 ரன்களைக் குவித்தது பஞ்சாப். சென்னை தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

188 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட சென்னை அணி பேட்டா்களில் ராபின் உத்தப்பா 1, மிட்செல் சான்ட்னா் 8, ஷிவம் துபே 8 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அம்பதி ராயுடு அதிரடி 78: அம்பதி ராயுடு 6 சிக்ஸா்கள், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 78 ரன்களை விளாசி ரபாடா பந்தில் போல்டாகி வெளியேறினாா். ராயுடு அவுட்டான நிலையில் சென்னை அணியின் ரன்குவிப்பு வேகம் சரிந்தது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி வெற்றி பெறச் செய்த தோனி இதிலும் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 சிக்ஸா், பவுண்டரியுடன் 12 ரன்களை மட்டுமே சோ்த்து ரிஷி தவன் பந்தில் அவுட்டானார்.

20 ஓவா்களில் 176/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது சென்னை. கேப்டன் ரவீந்திர ஜடேஜா 21, பிரிட்டோரியஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் ரபாடா, ரிஷி தவன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

சென்னையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணிக்கு இது நான்காவது வெற்றியாக அமைந்தது. சென்னைக்கு இது 6-ஆவது தோல்வியாகும். ஷிகா் தவன் ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றார். புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

Similar News