கிரிக்கெட் ஜாம்பவான் ஷேர்ன் வார்ன் காலமானார் - காரணம் இதுதான்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த, சுழற்பந்து வீச்சில் கொடிகட்டி பறந்த ஷேர்ன் வார்ன் காலமானார்; அவருக்கு வயது 52.;
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அவரை, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். ஷேன் வார்ன் மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்காக அவர் விளையாடத் தொடங்கினார். பின்னர், தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார்.
ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக, மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் உள்ளார். இதுதவிர, 194 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 10 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான போது, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.