ஷமியின் சூப்பர் செவன்: இறுதிப்போட்டியில் இந்தியா

ஷமி மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது

Update: 2023-11-16 04:15 GMT

முகமது சமி 

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முறையே 117 ரன்கள் மற்றும் 105 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கனே வில்லியம்சன் 69 ரன்களில் வெளியேறினார். அந்த அணியின் டேரைல் மிட்செல் அதிக அளவாக 134 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 7 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.

கிளென் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்துள்ளார். அவரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பந்துவீச்சில் முகமது ஷமி அசத்தினார். அவர் நேற்றைய ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை மிரட்டினார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 முறை 5+ விக்கெட்களை ஷமி கைப்பற்றி உள்ளார். உலகக் கோப்பையில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் அவர் (ஒட்டுமொத்தமாக 4 முறை) திகழ்கிறார்.

ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது. பந்துவீச்சில் ஜொலித்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News