சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 39 முறை தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா..?
ஐபிஎல்லில் விராட் கோலி தவறாக அவுட் கொடுத்ததற்காக நேற்று அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 39 முறை தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆனால், ஒருமுறை கூட இதுகுறித்து சச்சின் அம்பயரிடம் ஏன் என்று கேள்வி கேட்டதில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இப்படி பல சாதனைகளையும் வரலாற்றையும் தனது பெயரில் பதிவு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 39 முறை தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டுள்ளார். இப்படி இருந்தும், சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களும், 200 டெஸ்ட் போட்டிகளில் 15, 921 ரன்களும் எடுத்துள்ளார். இந்த 39 முறை மட்டும் தவறான முடிவுகளால் சச்சின் அவுட்டாகாமல் இருந்திருந்தால், சச்சினின் சத சாதனையும், ரன் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கலாம்.
தற்போது, கிரிக்கெட்டில் ஹாட் ஸ்பாட், டி.ஆர்.எஸ். என்ற எண்ணற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, அவுட்டா இல்லையா என்பதை பரிசீலனை செய்யலாம். ஆனால், அப்போது அந்த வசதிகள் எல்லாம் கிடையாது. அம்பயர் என்று அறிவித்தால் எதுவும் சொல்லாமல் நடையை கட்டிவிட வேண்டியதுதான். அப்படிதான் சச்சினும் கடந்து வந்த பாதை. இதை துரதிர்ஷ்டம் இல்லை என்றால் வேறு என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
சச்சின் டெண்டுல்கரை பெரும்பாலும் தவறாக அவுட் செய்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஸ்டீவ் பக்னர், இலங்கையை சேர்ந்த அசோகா டி சில்வா, ஆஸ்திரேலியாவை டேரல் ஹார்ப்பார் ஆகியோர் உள்ளனர்.
எப்படியெல்லாம் அவுட் ஆனார்..?
1999 அடிலெய்டு டெஸ்டில், சச்சின் டெண்டுல்கருக்கு வீசப்பட்ட பந்து அவரது தோளில் பட்ட போதிலும், டேரல் ஹார்ப்பரால் கொடுத்த தவறான முடிவால் அவுட் ஆனார்.
1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மைக்கேல் காஸ்ப்ரோவிச் ஆஃப் ஸ்டம்புக்கு அப்பால் சென்ற பந்திற்கு எல்பிடபிள்யூ கொடுத்து சச்சினை அவுட் என அறிவித்தார்.
2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், அலீம் தார் சச்சினின் பேட்டில் படாத பந்திற்கு அவுட் என அறிவித்தார். இருப்பினும் பின்னர் ஆம், தான் தவறு செய்துவிட்டதாக அலீம் தாரே ஒப்புக் கொண்டார்.
2007 இங்கிலாந்துக்கு எதிரான அதே தொடரிலேயே, சச்சின் 99 ரன்களில் இருந்தபோது, நடுவர் இயன் கோல்ட் எடுத்த தவறான கேட்ச் சிக்னலால் அவுட்டானார்.
இதுபோல், பலமுறை சச்சின் டெண்டுல்கர் தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டார். ஆனால், ஒருமுறை கூட நடுவரின் முடிவு குறித்து கேள்வி கேட்டது கிடையாது. எனவே, இன்றும் சச்சினின் அமைதி தன்மையும், அடக்கமும் கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது.