கடைசி டி20 போட்டி: தென்ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-10-05 01:28 GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால், தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர். இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் சோபிக்காத பவுமா இந்த போட்டியிலும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதை தொடர்ந்து ரைலி ரூசோவ் களமிறங்கினார். பவர்பிளேவை நன்கு பயன்படுத்தி ரன்கள் குவிக்க தொடங்கிய இந்த ஜோடி பவர்பிளே முடிந்த பிறகு பவுண்டரிகளாக விளாசினர். இந்திய அணியின் பந்துவீச்சு டி காக்- ரைலி ரூசோவ் ஜோடியிடம் எடுபடவில்லை. சிறப்பாக ஆடிய டி காக் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தென் ஆப்பிரிக்க அணி 12.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான பீல்டிங்கால் டி காக் ரன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து ஸ்டப்ஸ் களம் புகுந்தார். அதிரடியை தொடர்ந்த ரைலி ரூசோவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒருமுனையில் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ரூசோவ் சிக்சர்களை விளாசி வந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் வெகுவாக உயர்ந்தது.

கடைசி ஓவரில் ரூசோவ் 48 பந்துகளில் சதமதித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரின் முதல் சதமாகும். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- ரிஷப் பண்ட் களமிறங்கினர். ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா தான் சந்தித்த 2-வது பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம்  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தவர்கள் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 43 முறை ஆட்டம் இழந்து முதல் இடத்தில் உள்ளார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ், ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரி விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். மறுமுனையில் அதிரடியுடன் பேட்டிங்கை தொடங்கிய பண்ட் 27 ரன்களில் (14 பந்துகள்) நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இந்திய அணி சரிவில் இருந்து மீள முடிரவிச்சந்திரன் அஸ்வின் (2 ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் மற்றும் உமேஷ் யாதவ் ஜோடி அதிரடி காட்டினாலும், அது இந்திய அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் இந்திய அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிடோரிஸ் 3 விக்கெட்களும், மகாராஜ், நிகிடி, பார்னெல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News