IPL 2023: ராஜஸ்தானிடம் மீண்டும் தோல்வியை தழுவிய சென்னை
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32ரன்கள் வித்தியாசத்தில் வென்றது;
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறம் ஜாஸ் பட்லரின்(27 ரன்கள்) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் (17 ரன்கள்) துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டி ராஜஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெய்ஸ்வால் (8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்த நிலையில், துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து சென்னை பவுலர் தீக்ஷனா வீசிய 17-வது ஓவரில் ஷிம்ரான் ஹெட்மேயர் (8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து துருவ் ஜுரேல்-படிக்கல் ஜோடி ரன் ரேட்டை உயர்த்தியது. இதில் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட துருவ் ஜுரேல்(35 ரன்கள்), கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீட்சனா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி ஆடத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ருதுராஜ் 29 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்கள் விக்கெட்டை ஆடம் ஜம்பா வீழ்த்தினார். அடுத்து வந்த ரஹானே (15) நிலைத்து ஆடவில்லை. அம்பத்தி ராயுடு டக் அவுட்டானார். இந்த இரு விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்,
பின்னர் சிவம் துபே மற்றும் மொய்ன் அலி சற்றே நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். ஆனால், ஆடம் ஜம்பா பந்தில் மொயின் அலி (12 பந்துகள், 23 ரன்கள்) எடுத்து அவுட்டானார். சென்னை அணை 15 ஓவர்களில் 124 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜம்பா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட களமிறங்கிய ஜடேஜா நிதானமாக விளையாடினார். கடைசி இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 19வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிவம் துபே இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட்டானார்
இறுதியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது