RCB vs KKR IPL 2023 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா! பெங்களூரு தோல்வி
20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.;
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெகதீசன் தனது விக்கெட்டை 27 ரன்கள் அடித்திருந்த நிலையில் இழந்தார்.
5 சிக்ஸர்களைப் பறக்க விட்டு பெங்களூரு அணியை கொஞ்சம் பயமுறுத்தினார் ராய். அவர் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அவருக்குப் பிறகு களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் தனது பங்குக்கு 26 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து 4 சிக்ஸர்களை பறக்க விட்டு பட்டையைக் கிளப்பினார்.
அடுத்து வந்த ஆண்ட்ரூ ரஸல் ஏமாற்றினார். ரிங்கு சிங்க் 10 பந்துகளில் 18 ரன்களும், டேவிட் வீசே 3 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தார். இரண்டு சிக்ஸர்களைக் கடைசி நேரத்தில் பறக்கவிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களான விராட் மற்றும் பாஃப் சரமாரியாக ஆடினர்.
பாஃப் 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 2 ரன்களிலும், மேக்ஸ்வெல் 5 ரன்களிலும் நடையைக் கட்ட, அடுத்து வந்த லாம்ரோர், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சரியான நேரம் பார்த்து பவுண்டரிக்கு அனுப்பி ஆடி வந்தனர்.
18 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்த லோம்ரோர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலியும் 37 பந்துகளில் 54 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், சுயாஷ் சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுயாஷ் அவுட் ஆக, ஹசரங்கா களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.