ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை

41 முறை சாம்பியன் மும்பை அணியை வென்று ரஞ்சி கோப்பையை மத்திய பிரதேச அணி முதல் முறையாக கைப்பற்றியது;

Update: 2022-06-26 13:48 GMT

1934ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சிக்கோப்பைத் தொடரில் இதுவரை மும்பை அணி மட்டும் 41 முறை பட்டம் வென்று மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், ரஞிக்கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை மட்டும் தான். அதாவது 1958 முதல் 1973 வரை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி, அந்தச் சாதனையை படைத்திருக்கிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 177.2 ஓவர்களில் 536 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி 162 ரன்கள் முன்னிலை பெற்றது. மத்திய பிரதேச அணியில் ரஜத் படிதார் 122 ரன்னில் (219 பந்து, 20 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மொகித் அவாஸ்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தது. ஹர்திக் தாமோர் 25 ரன்னிலும், கேப்டன் பிரித்வி ஷா 44 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அர்மான் ஜாபர் 30 ரன்களுடனும், சுவேத் பார்கர் 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டத்தில் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 269 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.மும்பை அணியில் சுவேத் பார்கர் 51 ரன்களும் ,சர்பராஸ் கான் 45 ரன்களும் ,பிரித்வி ஷா 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.மத்திய பிரதேச அணியில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதனால் ரஞ்சி கோப்பையை வெல்ல மத்திய பிரதேச அணி வெற்றி பெற 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 108 ரன்கள் இலக்குடன் விளையாடிய மத்திய பிரதேச அணி 4விக்கெட்டுகள் இழந்து 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இவ்வளவு பலம் வாய்ந்த மற்றும் ரஞ்சிக் கோப்பையில் வரலாறு படைத்துள்ள மும்பை அணியை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேசம் அணி வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது. 

Tags:    

Similar News