தோனி, ஜடேஜா போராட்டம் !.. 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!
கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா மீண்டும் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் அப்போதும் 1 ரன்னே எடுக்க முடிந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை ருசித்தது.;
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகி வெளியேறினார். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் துபேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன்பிறகு ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தத் படிக்கல். இருவரும் இணைந்து வானவேடிக்கைகள் காட்டினர். சென்னை அணியின் பந்து வீச்சை சமயம் பார்த்து பவுண்டரி, சிக்ஸர்களுக்கு விரட்டி அடித்தனர். படிக்கல் அதிரடியால் ரன்கள் ஏறுமுகமாக இருந்தன. அதேநேரம் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவர் கொஞ்சம் திணறினார். 9வது ஓவரை வீசிய ஜடஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வந்த வேகத்திலேயே டக்அவுட் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் பிறகு ரன்கள் கொஞ்சம் அதிகமானது. விக்கெட் விழுவது நின்றது. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அவர்களைப் பிரிக்க வந்தார் ஆகாஷ் சிங். அவர் வீசிய 15வது ஓவரில் அஸ்வினும் அவுட் ஆக, அவருக்கு பிறகு களமிறங்கினார் ஷிம்ரன் ஹெட்மயர்.
16 - 20 ஓவர்களில் அதிரடியைக் காட்டும் ஷிம்ரனை அவுட் ஆக்க சென்னை அணி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பட்லர் கூட 52 ரன்களில் அவுட் ஆகிவிட்டார். ஆனால் ஷிம்ரல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 175 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
சென்னை அணி சார்பில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் மிகவும் நிதான ஆட்டத்தைத் துவங்கினர்.
ஆட்டம் துவங்கி சிறிது நேரத்தில் சந்தீப் சர்மா பந்து வீச்சில் 8 ரன்கள் எடுத்திருந்த ருத்துராஜ் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அஜிங்யா ரஹானே களமிறங்கினார்.
டெவான் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ரஹானே 31 ரன்களை 19 பந்துகளில் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே 8 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப்பின் வந்த மொயின் அலி ஆடம் ஷம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணியைக் காப்பாற்ற இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்தார் அம்பத்தி ராயுடு. அவருக்கு யஸ்வேந்திர சாஹல் பந்துவீச நேராக ஹெட்மயர் கையில் பந்தைக் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனிடையே பொறுமையாக விளையாடி வந்த டெவான் கான்வே அரைசதம் அடித்தார். அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசி 5 ஓவருக்கு 63 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்றிருக்கும்போது களத்தில் ஏற்கனவே ஜடேஜா நின்றார். தோனி இந்த நிலையில் களமிறங்கினார்.
நிதானமாக ஆடி கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை எனும் நிலைக்கு கொண்டு வந்தனர் தோனி மற்றும் ஜடேஜா இருவரும்.
சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசியதால் பிரஷர் அவர் பக்கம் திரும்பியது. சரியாக போடப்பட்ட முதல் பந்து டாட் பாலாக விழுந்தது.
இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் தோனி. அடுத்து வீசப்பட்ட 3வது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் தோனி. நான்காவது பந்தை சரியாக அடிக்கமுடியாமல் போக, அது 1 ரன்னில் நின்றுகொண்டது.
கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா மீண்டும் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் அப்போதும் 1 ரன்னே எடுக்க முடிந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை ருசித்தது.