PBKS Vs SRH மளமளவென சரிந்த விக்கெட்டுகள்! தனி ஆளாக போராடிய ஷிகர் தவான்!
பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் மளமளவென சரிந்த நிலையிலும் மறுபுறம் நிலையாக நின்று ஆடிய ஷிகர் தவான் 99 ரன்கள் அடித்தார்.;
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களான பிரப்ஷிம்ரன் சிங் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியே கிளம்பினார். புவனேஷ் குமார் வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனது பஞ்சாப் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
அவருக்கு பிறகு ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் மேட் ஷார்ட். ஹைதராபாத் அணி சார்பில் இரண்டாவது ஓவரை மார்க்கோ ஜேன்சன் வீசினார். எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த அவரைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மா களமிறங்கினார். 4வது ஓவரில் அவரும் அவுட் ஆக, மறுபுறம் ஷிகர் தவான் தனி ஆளாக நின்று போராடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு துணையாக களமிறங்கினார் சாம் கரண். இவர்கள் இருவரும் கொஞ்சம் கூடுதல் பார்ட்னர்ஷிப்பை எடுப்பார்கள் என்று நினைத்தபடியே, 9வது ஓவர் வரை நின்றது இந்த இணை. மயாங்க் மார்கண்டே வீசிய அந்த ஓவரின் 5 வது பந்தில் சாம் கரண் அவுட் ஆக, இந்த இணையும் உடைந்தது.
ஷகந்தர் ராசா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாகர், நாதன் எல்லீஸ் என வருவதும் போவதுமாக இருந்தாலும், மறுபுறம் நிலையாக நின்று தனி ஆளாக பஞ்சாப் அணிக்கு ரன் சேர்த்தார் ஷிகர் தவான்.
ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்திருந்தது. இதில் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற 10 பேரும் சேர்ந்து 44 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் மோகித் ரதீ சாதனை ஒன்றை படைத்திருந்தனர். கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இருவரும் சேர்ந்து 55 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத் அணி சார்பில் மயாங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும் மார்க்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது ஹைதராபாத் அணி.