இங்கிலாந்து,132 ரன்களில் நியூசிலாந்தை வீழ்த்தியது..

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது;

Update: 2022-06-02 21:26 GMT

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். முதலில் வில் யங் 1 விக்கெட்டையும், அடுத்தது டாம் லாதம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய டெவான் கான்வேவை (3) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார். இதன்பிறகு, அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். கேன் வில்லியம்சன் (2), டேரில் மிட்செல் (13), டாம் பிளண்ட்வெல் (14) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், நியூசிலாந்தால் தாக்குப் பிடிக்க  முடியவில்லை. பின்னர், கைல் ஜேமிசன் (6), அதிரடியாக விளையாடிய டிம் சவுதி (26) ஆகியோரை மீண்டும் ஆண்டர்சன் வீழ்த்தினார். கடைசி இரண்டு விக்கெட்டுகளை முறையே மேத்யூ பாட்ஸ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடிய காலின் டி கிராண்ட்ஹோம் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்தார்.

இதன்மூலம், 40 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து தனது முதல் - இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி 43 ரன்களும், ஆலி போப் 7 ரன்களும், ஜோ ரூட் 11 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) 1 ரன்னும், ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னும், மேத்யூ போட்ஸ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 36 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியை விட 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Tags:    

Similar News