சென்னையுடன் மோதும் குஜராத்! ஞாயிற்றுக்கிழமை தயாரா இருக்கீங்களா?
234 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகளை மளமளவென சரிய முடிவில் இலக்கை எட்ட முடியாமல் வீழ்ந்தது மும்பை அணி.;
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் களமிறங்கினர்.
குஜராத் ஓபனர்கள் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக களமிறங்கினர். 3 பவுண்டரிகள் மட்டும் அடித்த நிலையில் 16 பந்துகளில் 18 ரன்களுடன் வெளியேறினார் சஹா.
அவரைத் தொடர்ந்து சாய் சுதர்ஷன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினர். மும்பை அணி பவுலர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார் கில். மறுபுறம் சாய் சுதர்ஷன் அருமையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தார்.
17 ஓவர்கள் வரை இந்த ஜோடி அருமையாக நின்று ஆடியது. அந்த நேரத்தில் கில் அவுட் ஆனார். 60 பந்துகளைச் சந்தித்த அவர் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என நொறுக்கி 129 ரன்கள் குவித்தார்.
அவருக்கு பிறகு ஹர்திக் பாண்டியா சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார். 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் ஷாட் அடித்து விளையாடவேண்டும் என நினைத்து ரிட்டயர்டு அவுட் ஆனார் சாய். அடுத்து ரஷீத் கான் களமிறங்கினார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். ஆகாஷ், ஜோர்டன், பியூஸ் சாவ்லா ஓவர்களை கிழித்து தொங்கவிட்டது குஜராத் அணி.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் நேஹல் வதேரா களமிறங்கினர். ரோஹித் 8 ரன்களிலும், நேஹல் 4 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனிடையே கேமரூன் கிரீனுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் ஓரளவுக்கு ரன் வேகத்தை கூட்ட முயற்சித்தனர். அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த கிரீன் அவசரப்பட்டு அவுட் ஆகி வெளியேற அவருக்கு பிறகு திலக் வர்மா களமிறங்கினார். அவர் காட்டடி அடித்து மும்பை அணியின் ரன்களை துரிதப்படுத்தினார்.
14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து விஷ்ணு வினோத் களமிறங்க, அதுவரை நன்றாக ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோகித் சர்மா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் வினோத்தும் அவுட் ஆகி நடையைக் கட்டினார். அடுத்த ரஷீத் கான் பந்து வீச அவரது ஓவரில் டிம் டேவிட் அவுட் ஆகி கிளம்ப, மும்பையின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.