திருச்சியில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
திருச்சியில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் துவக்கப்பட்டது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.
போட்டிகளை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது தமிழகம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று பாராட்டினார். முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சிறந்த விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கும் என்றார். விழாவில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மாநில விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மல்லர் கம்பம் ஏறும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சியில் இன்னும் சில விளையாட்டு போட்டிகளும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.