திருச்சியில் கேலோ இந்தியா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

Update: 2023-12-10 18:09 GMT

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் கையுந்துபந்து மற்றும் கோ-கோ விளையாட்டிற்கு அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கூறியதாவது:-

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாநகரங்களில் 26 விளையாட்டுகளுக்கு 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடைபெறவுள்ளது.

இதன் தொடர்பாக, கையுந்துபந்து மற்றும் கோ-கோ ஆகிய குழு விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அணியும் இடம்பெறவுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகள் அவர்களது சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய 2 நாட்களில் கையுந்துபந்து மற்றும் கோ-கோ விளையாட்டுகளுக்கு அண்ணா விளையாட்டரங்கில் காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள 18 வயதிற்குட்பட்ட 01.01.2005-க்கு பிறகு பிறந்த வீரர்கள், வீராங்கனைகள் பின்வரும் ஆவணங்களுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்

பள்ளிக் கல்விச் சான்றிதழ் 

பிறப்புச் சான்றிதழ்

தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News