இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட்: டிராவில் முடிந்தது
கான்பூரில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது
இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 345 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் குவித்தார், ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 296 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தனர், இந்திய பந்து வீச்சாளர் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்க்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் 234 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோது டிக்ளேர் செய்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 65 எடுத்தார்.
284 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்க்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வில் யங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், டாம் லாதமும் வில்லியம் சோமர்வில்லேயும் அணியை காப்பாற்ற முயன்றனர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருந்தபோது வில்லியம் சோமர்வில்லே ஆட்டமிழந்தார். பின்னர் கேன் வில்லியம்சுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை 118ஆக உயர்த்திய லாதம் அவுட்டாக, அணி சரிவை சந்தித்தது.
அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சில் நியூசிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால், அணியின் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை.
ரச்சின் ரவீந்திரன் மேற்கொண்ட தடுப்பாட்டம், இந்திய அணியின் வெற்றியை பறித்தது. 85 பந்துகளில் அவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார், அவருக்கு துணையாக அஜாஸ் படேல் தடுப்பாட்டம் மேற்கொள்ள, இந்த ஜோடியை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை.
10 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 8 ஓவர்கள் தாக்குப்பிடித்து இறுதியில் நியூசிலாந்து அணி 165 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிரா செய்தது.