ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.;

Update: 2023-12-13 12:09 GMT

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய  இந்திய அணி 

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் எழுச்சி பெற்ற இந்திய அணி பிற்பாதி ஆட்ட நேரத்தில் தீவிர முனைப்புடன் விளையாடி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. பிற்பாதி ஆட்ட நேரத்தில் இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் நெதர்லாந்து அணி 1 கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி தரப்பில் ஆதித்யா, அரைஜீத் சிங், சவுரப் ஆனந்த் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் டிமோ பீர்ஸ், பிபின் வான்டெர் மற்றும் ஆலிவர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டங்களில் முதல் அரையிறுதியில் இந்தியா-ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதி போட்டியில்  பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.

Tags:    

Similar News