அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்

மதுரை அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் உருவாகி வரும் ஜல்லிக்கட்டு மைதானம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Update: 2023-12-07 15:37 GMT

இது கிரிக்கெட் ஸ்டேடியம் அல்ல. மதுரை அலங்காநல்லூரில் உருவாக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் தான்.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு ஒன்று தான். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் போட்டிகள் சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக இந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.

சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, தொடர்ந்து நிறைவு பெற்றுவருகிறது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளர்கள் பகுதி, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் அறை, உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாட்களை  தவிர மற்ற நேரங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக ரூ. 22 கோடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டர் புதிய தார்சாலையும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.  ஜனவரி முதல் வாரத்தில் இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் திறக்கப்பட்டு பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News