ஐ.பி.எல்.: பெங்களூரு அணிக்கு மூன்றாவது வெற்றி
பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி பஞ்சாப் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்;
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொகாலியில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. தோள்பட்டை காயத்தில் இருந்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முழுமையாக மீளாததால் அவருக்கு பதிலாக சாம் கர்ரன் அணியை வழிநடத்தினார். கேப்டன் டு பிளிஸ்சிசுக்கு விலாப்பகுதியில் லேசான காயப் பிரச்சினை இருப்பதால் பெங்களூரு அணியில் கேப்டன் பொறுப்பை விராட் கோலி மேற்கொண்டார். டு பிளிஸ்சிஸ் பேட்டிங் மட்டுமே செய்வார், பீல்டிங் செய்யமாட்டார். பிற்பாதியில் அவரை வெளியேற்றி விட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) விதிப்படி மாற்று ஆட்டக்காரர் இறக்கப்படுவார் என்று கோலி அறிவித்தார்.
'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்ய அழைத்தது. விராட் கோலியும், டு பிளிஸ்சிஸ்சும் பெங்களூருவின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக ஆடிய இவர்கள் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். கோலி நிலைத்து நின்று ஆடினாலும் ரன்வேகத்தில் சற்று சுணக்கம் காணப்பட்டது. அதே சமயம் அதிரடி காட்டிய டூ பிளிஸ்சிஸ், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிராரின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் விளாசினார். டுபிளிஸ்சிஸ் 31 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அந்த அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 100-ஐ தொட்டது. நடப்பு தொடரில் பெங்களூரு தொடக்க ஜோடியின் 2-வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
சிறிது நேரத்தில் விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 48-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் திரட்டிய (16.1 ஓவர்) நிலையில். ஹர்பிரீத் பிராரின் சுழலில் கோலி 59 ரன்களில் (47 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவிடம் பிடிபட்டார்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் (0) சந்தித்த முதல் பந்தையே அவுட்டானார். மறுமுனையில் 68 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பிளிஸ்சிஸ் 84 ரன்களில் (56 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது.
175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லியாம் லிவிங்ஸ்டன் (2 ரன்), மேத்யூ ஷார்ட் (8 ரன்), ரூ.18½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் சாம் கர்ரன் (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு மத்தியில் மாற்று ஆட்டக்காரராக களம் கண்டு உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் தனது பங்குக்கு 46 ரன்கள் (30 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் 106 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இந்த சூழலில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா அணியை கரைசேர்க்க போராடினார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஒரே ஓவரில் ஹர்பிரீத் பிரார் (13 ரன்), நாதன் எலிஸ் (1 ரன்) ஆகியோருக்கு 'செக்' வைத்தார்.
கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப்பின் அணியின் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல், ஜிதேஷ் ஷர்மாவின் (41 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விக்கெட்டை வீழ்த்தி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு தரப்பில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 6-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். பஞ்சாப்புக்கு 3-வது தோல்வியாகும்.
சிராஜிற்கு ஊதா தொப்பி
பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 4 விக்கெட்டையும் சேர்த்து நடப்பு தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள முகமது சிராஜ் அதற்குரிய ஊதாநிற தொப்பியை வசப்படுத்தினார்.
இதே போல் பேட்டிங்கில் 6 ஆட்டத்தில் ஆடி 4 அரைசதத்துடன் 343 ரன்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கும் பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
கோலி 600 பவுண்டரி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு வீரர் விராட் கோலி நேற்று 5 பவுண்டரி விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 600 பவுண்டரிகளை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் இதுவரை 229 ஆட்டங்களில் விளையாடி 603 பவுண்டரிகள் அடித்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் (730 பவுண்டரி), டெல்லி கேப்டன் வார்னர் (619 பவுண்டரி) ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.