ஐபிஎல் 2023: லக்னோ அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதல்

லக்னோ அணியுடன் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்குமா?;

Update: 2023-05-03 05:58 GMT

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான ஆட்டம் 

ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் அடித்தும் கடைசி பந்தில் வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணியில் இறுதிகட்ட பந்து வீச்சு சீரற்ற வகையில் இருப்பது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ், மகாலா காயத்தால் வெளியில் இருக்கும் நிலையில் பதிரானா, ஆகாஷ் சிங், துஷர் தேஷ்பாண்டே ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு கேப்டன் தோனி சமாளித்து வருகிறார்.

தேஷ்பாண்டே 9 ஆட்டத்தில் 17 விக்கெட் வீழ்த்தியிருந்தாலும் ரன்களை வாரி வழங்குகிறார். அவர் ஓவருக்கு சராசரியாக 11.07 ரன் விட்டுக்கொடுத்துள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை கான்வே (5 அரைசதத்துடன் 414 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (354 ரன்), ஷிவம் துபே (264 ரன்), ரஹானே (224 ரன்) ஆகியோர் அருமையாக ஆடி வருகிறார்கள். சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்திருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர் அஜிங்க்யா ரஹானேவை இதுவரை 10 சந்திப்புகளில் மூன்று முறை வெளியேற்றியுள்ளார். மீண்டும் சிஎஸ்கேக்கு எதிராக மிஸ்ரா ஜொலிப்பாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே இந்தியன் பிரீமியர் லீக்கில் 1,000 ரன்களை எட்டுவதற்கு 48 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளது. இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக துபே இந்த சாதனையை படிக்கலாம். 

லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். அவரது காயம் குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இன்றைய ஆட்டத்தில் அவர் களம் இறங்குவது சந்தேகமே என தோன்றுகிறது. அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்தலாம்.

நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சீசனில் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத குயின்டான் டி காக் ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படலாம். கடினமான ஆடுகளம் மற்ற ஆடுகளங்களை போல் லக்னோ, ரன் வேட்டைக்கு உகந்தது கிடையாது. மெதுவான தன்மை கொண்ட இந்த பிட்சில் பந்தை வலுவாக துரத்தியடிப்பது கடினம்.

உள்ளூர் அணியான லக்னோ இங்கு 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 3-ல் தோற்று இருக்கிறது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் குஜராத்துக்கு எதிராக 136 மற்றும் பெங்களுருவுக்கு எதிராக 127 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. எனவே ஆடுகள சூழலுக்கு ஏற்ப சாதுர்யமாக செயல்படும் அணியின் கையே களத்தில் ஓங்கி நிற்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தீக்ஷனா அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா, ஆகாஷ் சிங்.

லக்னோ: கைல் மேயர்ஸ், மனன் வோரா அல்லது பிரேராக் மன்கட், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், அமித் மிஸ்ரா, அவேஷ்கான் அல்லது யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் அல்லது மார்க்வுட்

Tags:    

Similar News