ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

சென்னையில் வென்ற ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ப்பூரில் பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?;

Update: 2023-04-27 11:21 GMT

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முந்தைய 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்த சென்னை அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் இருக்கிறது.


சென்னை அணியின் பேட்டிங்கில் டிவான் கான்வே (4 அரைசதம் உள்பட 314 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (270 ரன்கள்), ரஹானே (209 ரன்கள்), ஷிவம் துபே (184 ரன்கள்) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். டிவான் கான்வே தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து இருப்பதும், முந்தைய ஆட்டத்தில் ரஹானே 24 பந்துகளில் அரைசத்தை எட்டியதுடன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (10 விக்கெட்), மொயீன் அலி (7 விக்கெட்), பதிரானா, தீக்ஷனா ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றியும் (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியும் (பஞ்சாப், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. இரண்டாவது பேட்டிங் செய்த ஆட்டதில் சந்தித்த இந்த தோல்விகளுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் முக்கிய காரணமாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், துருவ் ஜூரெல் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பாதகமான அம்சமாக உள்ளது. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (12 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின் (இருவரும் தலா 9 விக்கெட்), சந்தீப் ஷர்மா (7 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முந்தைய தோல்வியை மறந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வியூகங்களை வகுக்கும் ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.


அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர சென்னை அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். சமபலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னை அணியும், 12 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

Tags:    

Similar News