சென்னை அணி சூப்பர் வெற்றி! தோனியின் சிக்ஸர்களால் அரங்கமே அதிர்ந்தது...!
மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் துஷார் 2 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதனால் சென்னை அணி இப்போது 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாளான நேற்று இந்த தொடரின் 6வது போட்டியில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர் கொண்டது லக்னோ அணி. இதில் சென்னை அணி திரில்லிங் வெற்றி பெற்று தனது முதல் வெற்றிக் கணக்கைத் துவங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்றால் கேப்டன்கள் இருவருமே முதலில் எதிர் அணியைப் பேட்டிங் செய்யச் சொல்வார்கள் என்றே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் சென்னை அணிக்கு முதல் பேட் செய்யும் வாய்ப்பை வழங்கினார்.
முதலில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அதிரடி மன்னன் ருத்துராஜும், எதிர்ப்புறம் கான்வேயும் களமிறங்கினார்கள். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க லக்னோ அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் களமிறங்கினர்.
கைல் மேயர்ஸ், ஆவேஷ் காண், க்ருணால் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் வுட், யாஷ் தாகூர், ரவி பிஸ்னாய் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து களமிறங்கி சென்னை அணி பேட்டிங்கை உடைக்க பாடுபட்டனர்.
ஆனால் ருத்துராஜ் 57 ரன்களும் டெவான் கான்வே 47 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதன் பின்னர் வந்த ஷிவம் துபே கொஞ்சம் பந்துகளை சாப்பிட்டாலும் பின்னர் அதிரடி காட்டினார். 27 ரன்கள் துபே அவுட் ஆக அவரைத் தொடர்ந்து மொயின் அலி 19 ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு அம்பத்தி ராயுடு 27 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அந்த நேரத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி மூன்றாவது பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்திருந்தது.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர் மேயர்ஸ் அதிரடி காட்டினார். மறுபுறம் ராகுலும் 20 ரன்கள் எடுத்தார். மொயின் அலி ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது லக்னோ அணி. ஆனாலும் ஒருபுறம் ரன்கள் வந்துகொண்டே இருந்தன.
ஸ்டோய்னிஸ், பூரான், பதோனி ஆகியோர் தலா 18 பந்துகளைச் சந்தித்து முறையே 21, 32, 23 ரன்களை எடுத்தனர். கடைசியில் கிருஷ்ணப்பா கவுதம் 17 ரன்களுடனும், மார்க் வுட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது லக்னோ அணி. இதனால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.
தோனி அடித்த 12 ரன்கள் இக்கட்டான இந்த சூழ்நிலையில் சென்னை அணியைக் காப்பாற்றியிருக்கிறது.
மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் துஷார் 2 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதனால் சென்னை அணி இப்போது 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் 4வது இடத்திலுள்ள குஜராத் அணியுடன் 9வது இடத்திலுள்ள டெல்லி அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.