வங்கதேசத்திற்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..

வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.;

Update: 2022-12-10 13:57 GMT

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி வங்கதேசம் சிட்டாங்நகரில் உள்ள ஜாஹீர் அகமது சௌத்ரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவனும், இளம் வீரர் இசான் கிஸனும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்தபோது ஷிகர் தவன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இசன் கிஸனும், வீரட் கோலியும் ஜோடி சேர்ந்தனர்.

அவர்கள் இருவரும் வங்கதேச அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடிய இசான் கிஸன் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்திருந்த போது தஸ்கின் அகமது வீசிய பந்தில் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 10 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை விளாசினார்.

126 பந்துகளில் இரட்டை சதம் அடித்த இசான் கிஸன் குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்தவர் மற்றும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர் என்ற இரண்டு சாதனைகளை புரிந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரட் கோரி 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டிற்கு வீரட்கோலி- இசான் கிஸன் இணை 290 ரன்கள் குவித்தது. தொடர்ந்து மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை குவித்தது.

வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது, ஷாகிப் அல் ஹசன், எபாடட் ஹோசின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் அணி களம் இறங்கியது.

இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேசம் அணி 34 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் மட்டும் 43 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி தரப்பில் ஷர்குல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அக்ஸார் படேல், உம்ரன் மாலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை 210 ரன்கள் எடுத்த இசான் கிஸன் பெற்றார். தொடர் நாயகன் விருதை வங்கதேசம் அணி பந்துவீச்சாளர் மெகிந்தி ஹாசன் பெற்றார்.

இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும் ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கசேதம் அணி தொடரை கைப்பற்றியது. இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 ஆம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News