நெதர்லாந்திற்கு எதிரான கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் புதிய உலக சாதனை
நெதர்லாந்திற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.;
உலகக்கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் கில் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் இந்த போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித்ஷர்மா, சுப்மன் கில், மற்றும் விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகிய5 வீரர்களும் ஐம்பது ரன்களை தாண்டி உள்ளனர். இப்படி தொடர்ந்து ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரை சதத்தை தாண்டி இருப்பது கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை ஆகும்.