வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில், புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் அணியின் பந்து வீச்சாளர் தாஜுல் இஸ்லாம் மற்றும் மெகிந்தி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து, களம் இறங்கிய வங்கதேசம் அணி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸார் படேல், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
வங்கதேசம் அணி பாலோ ஆன் ஆனபோதிலும், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும், சுப்மன் கில்லும் சதம் அடித்தனர். 110 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் மெகிந்தி ஹசன் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாரா 102 ரன்கள் எடுத்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 61.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேசம் அணிக்கு இந்திய அணி நிர்ணயித்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க வீரரான சான்டோ 67 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், ஜாஹிர் ஹசன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர், 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இன்று ஐந்தாவது மற்றும் இறுதிநாள் ஆட்டம் நடைபெற்றது. மேலும், 52 ரன்கள் எடுப்பதற்குள் வங்கதேசம் அணி மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. சாகிப் அல் ஹசன் 84 ரன்கள் எடுத்தார்.
இதனால், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், அக்ஸார் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்கிஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்கிஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிசம்பர் 22 ஆம் தேதி டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.