முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி அபார பேட்டிங்

இந்தியா முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

Update: 2024-01-26 15:32 GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியா விளையாடி ரன்களை குவித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 47 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்கள் அடித்திருந்தது. ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், கில் 14 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 80 ரன்களிலும், கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னிலையை நோக்கி கொண்டு சென்றது. சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஐயர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே எஸ் பாரத் ஜோடியும் சிறப்பாக விளையாடி அணியின் முன்னிலையை வலுப்படுத்தும் நோக்கில் பேட்டிங் செய்தது.

அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் அடித்தார். மறுமுனையில் கே எஸ் பாரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் அடித்துள்ளது. இது இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் அதிகமாகும். ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News