இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்; இந்தியா அபார வெற்றி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்றஇரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;

Update: 2024-02-05 11:27 GMT

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (209 ரன்) அடித்து அசத்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இதனையடுத்து 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்களில் ரெஹான் அகமது 23 ரன், போப் 23 ரன், ஜோ ரூட் 16 ரன், பேர்ஸ்டோ 26 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கிராலி 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் 11 ரன், போக்ஸ் 36 ரன், பஷீர் 0 ரன், எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் அஷ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

Tags:    

Similar News