2 ஆவது டெஸ்ட் போட்டி: வங்கதேசம் அணி 227 ரன்களுக்கு ஆல்-அவுட்...
இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 227 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது.
3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசம் அணி கைப்பற்றியது. இருப்பினும், கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையே, இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், சிறப்பாக பந்து வீசி முதல் இன்னிங்கிஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்கிஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு உதவிய இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவிற்கு பதிலாக, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடங்க வீரர்களாக நஜ்மல் ஹோசின் சான்டோவும், ஜாகீர் ஹாசனும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 39 ஆக இருந்தபோது ஜாகீர் ஹாசன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்ட ஜெயதேவ் உனத்கட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் உனத்கட்டின் முதல் விக்கெட் என்பதால் அவரை சக வீரர்கள் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினர். அடுத்து களம் இறங்கிய மோமினில் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் வங்கதேசம் அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்குள் சுருண்டது. மோமினில் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், அஸ்வினின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தது.
தொடர்ந்து, களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல். ராகுல், சுப்மன் கில் ஆகியோர் நிதமானமாக ஆடத் தொடங்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 3 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.