இந்தியா- நியூஸிலாந்து 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து…
இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.;
நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாக ஷிகர் தவனும் நியமிக்கப்பட்டனர். மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கைப்பற்றியது.
அந்தப் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி தொடர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதேபோல, மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்ய தொடங்கிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய அனைத்து பந்துகளையும் நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
இதனால், 47.1 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை குவித்த நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களை குவித்தார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
2 ஆவது ஒருநாள் போட்டி:
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டன் நகரில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. தொடர் மழை காரணமாக நேரத்தை கணக்கில் கொண்டு 29 ஓவர் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. முதல் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பதிலாக தீபக் ஹூடா, தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
கேப்டன் ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸை தொடங்கினர். போட்டியின் 6 ஆவது ஓவரில் மேட் ஹென்றி வீசிய பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவன் விக்கெட்டை பறி கொடுத்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் ரன்களை குவித்துக் கொண்டிருந்த நிலையில், 13 ஆவது ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 89 ஆக இருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 34 ரன்களுடனும், சுப்மன் கில் 42 பந்துகளில் 45 ரன்களுடனும் களத்தில் நின்றனர். தொடர்ந்து, மழை பெய்துக் கொண்டு இருந்ததால் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி: இந்த நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் போட்டித் தொடரை சமன் செய்ய முடியும்.
இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தாலோ, மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டாலோ நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும். எனவே, மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி ஆகும்.