நாக்பூர் டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது;
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதனிடையே, டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். முகமது ஷமியும் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார், ஷமி 3சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. உஸ்மன் குவாஜா, டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்சை போல இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஸ்வின் பந்துவீச்சில் தொடக்க வீரர் குவாஜா 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேன் 17 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 10 ரன், மெட் ரென்சா 2 ரன் என அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்கள்
தொடர்ந்து ஹேண்ட்ஸ்கோம்ப் 6 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 10 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கம்மின்ஸ் ஒரு ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91ரன்களுக்கு 10 விக்கெட் இழந்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட் ,முகமது ஷமி 2 விக்கெட், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகிறது.