இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இன்று மோதல்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஒரே ஒரு பகல்-இரவு டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் கராரா ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.
ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 26 வெற்றிகளை குவித்த ஆஸ்திரேலிய அணியின் வீறுநடைக்கு சமீபத்தில் முற்றுப் புள்ளி வைத்த இந்திய அணி அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளூர் சூழ்நிலை சாதகமான அம்சமாகும். போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில் 'நாங்கள் எந்த விலை கொடுத்தாவது இந்த போட்டி தொடரை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த 3 ஆட்டங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது' என்றார்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3,4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.