இரண்டாவது வெற்றியை ருசித்தது குஜராத்!

19வது ஓவரில் வெற்றிக்கான ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி. ஆட்ட நேர முடிவில் சாய் சுதர்சன் 62 ரன்களும் மில்லர் 31 ரன்களும் எடுத்திருந்தனர்.;

Update: 2023-04-05 05:00 GMT

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் அதிரடியால் குஜராத் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர் டெல்லி அணி துவக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர்.

ஆரம்பத்திலேயே பிரித்வி ஷா அவுட் ஆகி வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த மார்ஷும் 4 ரன்களில் வெளியேறினார். இவர்களது விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார். மறுபுறம் வார்னர் கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த நிலையில் 37 ரன்கள் எடுத்து அவரும் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, அடுத்து ரீலி ரோசவ், அபிஷேக் போரெல் ஆகியோர் அவுட் ஆகி வெளியேறினர்.

சர்ப்ராஸ் கான் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடி 30 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஹக்கிம் கான் 8 ரன்களில் அவுட் ஆக, அக்ஷர் படேல் கடைசி ஓவர்களில் வெளுத்து வாங்கினார். இதனால் அவர் பங்குக்கு 36 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 162 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்ய வந்தனர் குஜராத் அணி வீரர்கள் சஹா மற்றும் கில்.

விருதிமான் சஹா, கில் இருவருமே தலா 14 ரன்கள் எடுத்து அவுட் ஆக கேப்டன் பாண்ட்யாவும் 5 ரன்களில் வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்ஷன், விஜய் சங்கர் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. அதிரடியாகவும் அவ்வப்போது நிதான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி விஜய் சங்கர் 23 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். உடன் டேவிட் மில்லரும் இருந்தார்.

19வது ஓவரில் வெற்றிக்கான ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி. ஆட்ட நேர முடிவில் சாய் சுதர்சன் 62 ரன்களும் மில்லர் 31 ரன்களும் எடுத்திருந்தனர்.

Tags:    

Similar News