GT Vs LSG லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி!

7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி. கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.;

Update: 2023-04-22 13:45 GMT

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. 20 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் இன்றைய போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் அந்த அணியின் துவக்க வீரர்களான விருதிமான சாஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

முதல் ஓவரை நவீன் உல் ஹக்கும் இரண்டாவது ஓவரை குருணால் பாண்டியாவும் வீச இரண்டாவது ஓவரில் விக்கெட் கிடைத்தது. சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.

லக்னோ அணி பந்து வீச்சை நிதானமாகவும் அதேநேரம் தேவையான நேரங்களில் பவுண்டரிக்கு விரட்டியும் சிறப்பாக விளையாடினர். 2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த குஜராத் அணிக்கு அடுத்த பார்ட்னர்ஷிப் 10 ஓவர்கள் வரை நீடித்தது.

விருதிமான் சஹா குருணால் பாண்டியா ஓவரில் லாங் ஆன் திசையில் அடிக்கப்பட்ட பந்தை தீபக் ஹூடா கேட்ச் பிடித்தார். 72 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது குஜராத் அணி. அடுத்து அபினவ் மனோகர் அந்த இடத்தில் களமிறங்கினார்.

ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 3 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் விஜய் ஷங்கர் களமிறங்கினார். அவருக்கு பொறுப்பு வாய்ந்த ஆட்டமாக இது அமைந்திருந்த போதிலும் 10 ரன்களில் அவுட் ஆக, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

கடைசி 5 ஓவர்களில் அடிக்கும் ரன்கள் தான் அவர்களை காப்பாற்றும் எனும் நிலையில், ஹர்திக் பாண்டியா ஒரு பக்கம் அதிரடியாக 50 பந்துகளில் விளையாடி 66 ரன்களில் அவுட் ஆக மறுபுறம் டேவிட் மில்லர் 12 பந்துகளுக்கு 6 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆக, 135 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது குஜராத் அணி.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீரர்கள் கே எல் ராகுல், கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். மிக எளிதான இந்த ஸ்கோரை லக்னோ அணி அடித்து வெற்றி பெறச் செய்யும் என நினைத்திருந்தபோது லக்னோ அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் விக்கெட்டை பிரிக்கவே பவர்ப்ளேவைத் தாண்ட வேண்டியதாயிற்று. ரஷீத் கான் வீசிய 7வது ஓவரில் கைல் மேயர்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். 19 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார் மேயர்ஸ். அவரைத் தொடர்ந்து குருணால் பாண்டியா களமிறங்கினார்.

கேஎல் ராகுல் மற்றும் குருணால் பாண்டியா இருவரும் சேர்ந்து நிலைத்து ஆடினர். 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாண்டியாவும் அவுட் ஆகி வெளியேற லக்னோ அணி 106 ரன்களை எடுத்திருந்தது. அவருக்கு பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 1 ரன்னில் அவுட் ஆக, கே எல் ராகுல் கடைசி வரை போராடினார்.

கடைசி ஓவரின் 2வது பந்தை வீசிய மோஹித் சர்மா, ராகுலை அவுட் செய்தார். ராகுல் அடித்த பந்தை ஜெயந்த் யாதவ் பிடிக்க இக்கட்டான சூழ்நிலையில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்டொய்னிஸும் முதல் பந்திலேயே அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.

கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அடுத்து ஆயுஷ் பதோனி ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்த பந்தில் தீபக் ஹூடா ரன் அவுட் செய்யப்பட லக்னோவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

Match: Lucknow Super Giants vs Gujarat Titans

Date: 22nd April 2023

Venue: Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow, India

போட்டி: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

தேதி: 22 ஏப்ரல் 2023

இடம்: பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ, இந்தியா

Tags:    

Similar News