பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- கேஸ்பர் ரூட் மோதல்
French Open 2022:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அலெக்சாண்டர் முதல் செட்டில் அலெக்சாண்டர் 4-2 என்று வலுவான முன்னிலை பெற்றார்.
அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட நடால் முதல் செட்டை 6-6 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆட்டத்தை டைபிரேக்கரிலும் தொடக்கத்தில் அலெக்சாண்டர் தான் ஆதிக்கம் செலுத்தினார். 6-2 என்று முன்னிலையுடன் அவருக்கு 3 முறை 'செட் பாயிண்ட்' வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட்டார்.
மனம் தளராமல் நம்பிக்கையுடன் தனக்கே உரிய பாணியில்ஆடிய நடால் மளமளவென மீண்டு முதல் செட்டை தனதாக்கினார்
இரண்டாவது செட்டிலும் இதே நிலைமை தான் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் 5-3 என்ற கணக்கில் அலெக்சாண்டரின் கை ஓங்கி இருந்தது. அதை தொடர்ந்து மறுபடியும் எழுச்சி பெற்ற நடால் 6-6 என்ற கணக்கில் சமநிலையை உருவாக்கினார்.
2 செட் கூட நிறைவடையாத நிலையில் ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நடந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த சூழலில் ஷாட் அடிக்கும் போது கீழே விழுந்ததில் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அலெக்சாண்டர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
காலில் வலி அதிகமாக இருப்பதால் தன்னால் தொடர்ந்து விளையாட இயலாது என்று கூறிய அலெக்சாண்டர் ஊன்றுகோல் உதவியுடன் களத்திற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு கண்ணீர் மல்க வெளியேறினார்.
இதையடுத்து நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 'களிமண் தரை போட்டியின் மன்னன்' என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் மற்றொரு ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். இதனால் நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதிபோட்டியில் காஸ்பர் ரூட் 13 முறை சாம்பியனான ரபெல் நடாலை சந்திக்கிறார்.